சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-01-07 18:33 GMT
சீர்காழி:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, தேர் தெற்கு வீதி, தேர் வடக்கு வீதி, பிடாரி வடக்கு வீதி, கொள்ளிடம் முக்கூட்டு, ெரயில்வே ரோடு, சீர்காழி புறவழிச்சாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தினத்தந்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 
ரூ.500 அபராதம்
இந்தநிலையில் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் நேற்று சீர்காழி நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில், நகராட்சி பணியாளர்கள், போலீசார் உதவியோடு சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் இடையூறாக சுற்றித்திரிந்த 25 மாடுகளை பிடித்து அதனை நகராட்சி வளாகத்திற்குள் கொண்டு சென்று அடைத்தனர். 
பின்னர் மாட்டின் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றிற்கு ரூ.500 வீதம் அபராதம் விதித்து எச்சரித்து மாடுகளின் உரிமையாளர்களை அனுப்பி வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்திய சீர்காழி நகராட்சிக்கும் செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்