பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பூரில் அதிகாலையில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானது.
திருப்பூர்
திருப்பூரில் அதிகாலையில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானது.
பனியன் நிறுவனம்
திருப்பூர் எஸ்.வி.காலனி 8-வது வீதியில் சாதிக்பாஷா என்பவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கட்டிடத்தின் முதல் தளத்தில் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பனியன் நிறுவனத்தை மூடி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பனியன் நிறுவனத்துக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
பல லட்சம் சேதம்
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.