வேலூரில் லாரி டிரைவர்கள் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.2¾ லட்சம் கொள்ளை
வேலூரில் லாரி டிரைவர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர்
வேலூரில் லாரி டிரைவர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிரைவர் மீது தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா சின்னநெற்குணம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 42). லாரி டிரைவர். இவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு மற்றொரு டிரைவர் அன்பழகனுடன் சென்றார்.
அங்கு நெல் மூட்டைகளை இறக்கி விட்டு அதற்கான பணத்துடன் வேலூர் வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கொணவட்டம் அருகே லாரியை நிறுத்தி விட்டு வடிவேலு தனது முதலாளிக்கு போன் செய்து நெல் விற்ற பணத்துடன் கொணவட்டம் பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் திடீரென இருப்பு கம்பியால் வடிவேலுவை தாக்கினர். அவரின் சத்தம் கேட்டு லாரியில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகன் எழுந்து வந்து தடுக்க முயன்றார்.
ரூ.2¾ லட்சம் பறிப்பு
அப்போது அந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடியை எடுத்து இருவரின் முகத்திலும் வீசி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே நேற்று காலை நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள், சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் (37), காட்பாடி கோபாலபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சரண்ராஜ் (32), தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தீனா என்ற விஷ்ணு (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் 3 இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.