புலிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
புலிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை;
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த புலிமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடக்கிறது. புலிமேடு ஊராட்சியில் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால் தொழிலாளர்களை குழுக்களாக பிரித்து வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தோடு முதல் குழுவுக்கு வேலை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இரண்டாவது குழுவுக்கு வேலை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கபடவில்லை. இதனால் வேலை வழங்காத 2-வது குழுவை சேர்ந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேலை வழங்கக்கோரி புலிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி முரளிதரன், துணைத் தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சலாவுதின் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.