பொங்கல் பரிசுத்தொகுப்பு இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அலைக்கழிப்பு
உடுமலையில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் மற்றும் துணிப்பை இருப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.;
உடுமலை
உடுமலையில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் மற்றும் துணிப்பை இருப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, உளுந்து, கரும்பு மற்றும் துணிப்பை உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின்படி உடுமலையில் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும், அந்தந்த ரேஷன் கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையைப்பொறுத்து, நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைவரை இந்த பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
அதில், எந்த தேதியில் எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4, 5 -ந் தேதி ஆகிய 2 நாட்கள் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
இருப்பு இல்லாததால் அலைக்கழிப்பு
இந்தநிலையில் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிப்படி நேற்று முன்தினம் இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தனர்.
ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் மற்றும் துணிப்பை ஆகியவை இருப்பு இல்லாததால் கடை ஊழியர்கள், நாளை வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பினர். அதன்படி பொதுமக்களும், நேற்று இந்த பொருட்களை வாங்க வந்தனர்.
ஆனால் நேற்றும் பொருட்கள் மற்றும் துணிப்பை இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு இருப்பு இல்லாத நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு பரிசுத்தொகுப்பு பொருட்களை வாங்கிவர சென்றனர். இதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைகளுக்கு நேற்று பொங்கல்பரிசுத்தொகுப்பு பொருட்கள் வந்து சேர்ந்தன. இருப்பினும் துணிப்பை வந்துவிடும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருந்தனர்.
எதிர்பார்ப்பு
இதைத்தொடர்ந்து சில ரேஷன் கடைகளுக்கு முன்பு, பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் இன்று (சனிக்கிழமை) விநியோகம் செய்யப்படும் என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் இருப்பு இல்லாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) இந்த பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.