கோவிலுக்கு வெளியே சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டு இருந்ததால் நேற்று கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டு இருந்ததால் நேற்று கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்களில் அனுமதியில்லை
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசு வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இது தவிர வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் நேற்று மூடப்பட்டது. ஆனால் வழக்கம் போல பூஜைகள் நடைபெற்றன. கோவில்கள் மூடப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வெறிச்சோடிய வழிபாட்டு தலங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கோவில், குன்றக்குடி, மடப்புரம், தாயமங்கலம், கொல்லங்குடி உள்ளிட்ட கோவில்களில் நேற்று தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் அங்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்றபடி சாமி கும்பிட்டு சென்றனர். எப்போதும் பரபரப்பாக கூட்டமாக காணப்படும் பிள்ளையார்பட்டி கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் மடப்புரம், தாயமங்கலம் கோவில்களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அந்த கோவில் பகுதியில் இருந்த கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்தனர். காரைக்குடி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
இதேபோல் வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று மானாமதுரை அருகே புகழ்பெற்ற இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு முதல் வெள்ளிக்கிழமை தினத்தில் வழிபாட்டுக்கு அரசு தடை விதித்ததால் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.