பக்தர்கள் வெளியில் நின்று வழிபாடு
உடுமலையில், கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லாததால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே பிரதான கதவுக்கு முன்பு நின்று வழிபட்டு சென்றனர்.;
உடுமலை
உடுமலையில், கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லாததால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே பிரதான கதவுக்கு முன்பு நின்று வழிபட்டு சென்றனர்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
கதவுக்கு முன்பு வழிபாடு
அதனால் நேற்று உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அர்ச்சகர்கள் மட்டும் எப்போதும் போன்று கோவிலுக்குள் சென்று வழக்கமான கால பூஜைகளை நடத்தினர். ஆனால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் பிரதான நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் கோவிலுக்கு வெளியே பிரதான கதவுக்கு முன்பு நின்று சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். சில பக்தர்கள் கோவில் முன்புற வாசல் படிக்கட்டுகளில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.