கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமல்: கிருஷ்ணகிரியில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு-வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி:
வேகமாக பரவும் கொரோனா
கொரோனா வைரஸ் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டு இருந்தன. சில கோவில்களில் மட்டும் குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு சென்ற பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
வெறிச்சோடி காணப்பட்டது
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நேற்று கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்களில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சில சிறிய கோவில்களில் மட்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நேற்று குறைவான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இரவு நேர ஊரடங்கு
இதேபோல் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பெரும்பாலான கோவில்களின் நடை சாத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் வாசலில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் 10 மணிக்கு மேல் சாலைகளில் தேவையின்றி சுற்றிய நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.