தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 35 பேர் கைது

தேனியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-07 16:57 GMT
தேனி:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிலர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் வந்த வேனில், கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள் நாகராஜின், கன்னட சலுவளி கட்சியின் கொடியை கட்டி இருந்தனர். 
பெரியகுளத்தில் இந்த வேன் வந்த போது, பெரியகுளம் நகர நாம் தமிழர் கட்சி செயலாளர் புஷ்பராஜ் அந்த வேனில் இருந்தவர்களிடம் சென்று, வேனில் கட்டி இருக்கும் கொடியை அகற்றுமாறு கூறினார். பின்னர் அந்த கொடி அகற்றப்பட்டதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் இருமாநில மக்களிடம் வன்மத்தை விதைக்கும் வகையில் உள்ளதாக கூறி தென்கரை போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
இதனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் தடையை மீறி, போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். தொகுதி செயலாளர்கள் குணசேகரன், ஜெயபிரகாஷ், மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸ் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்