தங்கும் விடுதிகள் முன்பதிவு 2 நாட்கள் நிறுத்தம்
தங்கும் விடுதிகள் முன்பதிவு 2 நாட்கள் நிறுத்தம்
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு டாப்சிலிப்பில் யானைகள் முகாம், குரங்கு நீர்வீழ்ச்சி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விடுதிக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தங்கும் விடுதிகள் முன்பதிவு வாரத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தங்கும் விடுதிகள் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை குரங்கு நீர்வீழ்ச்சிக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.