ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு கோர்ட்டு உத்தரவு
தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:
தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறப்பு கோர்ட்டில் மனு
தேனி மாவட்ட தி.மு.க. இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி. இவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.
அந்த மனுக்களில், "கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர் தங்களின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிந்தே குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் மக்களை ஏமாற்றி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய 2 பேருக்கும் எதிராக தனித்தனி புகார் மனுக்களை மிலானி தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று நடந்தது.
அப்போது மாஜிஸ்திரேட்டு, மனுக்கள் மீது தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், "இந்த புகார்கள் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை வருகிற பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அல்லது அதற்கு முன்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வாரண்டு இல்லாமல் கைது செய்யக்கூடாது. எதிர்மனுதாரர்கள் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களாக இருப்பதால் மனுவை தாக்கல் செய்த நபருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.