வேடசந்தூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் டீசலை பிடித்து சென்ற பொதுமக்கள்

வேடசந்தூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் உடைந்தது. அதில் இருந்த டீசலை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.

Update: 2022-01-07 16:28 GMT
வேடசந்தூர்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெல்காமிற்கு தவிடு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியை தேனியை சேர்ந்த செந்தில்குமார் (45) ஓட்டினார். இவருடன் அதே ஊரை சேர்ந்த சென்றாயபெருமாள் (31) உதவியாளராக வந்தார். இந்த லாரி வேடசந்தூர் அருகே உள்ள தீத்தாக்கவுண்டனூர் என்னுமிடத்தில் சாலை வளைவில் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் டிரைவர் செந்தில்குமார், சென்றாயபெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே கவிழ்ந்த லாரியின் டீசல் டேங்க் உடைந்து, அதில் இருந்து டீசல் வெளியேறியது. இதில் ஆபத்தை உணராமல் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் லாரியில் இருந்து கொட்டிய டீசலை கேன்களில் பிடித்து சென்றனர். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்