வத்தலக்குண்டு அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

வத்தலக்குண்டு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-07 16:19 GMT
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே நடகோட்டை ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு வீடு கட்ட அரசு சார்பில் இலவசமாக காலி நிலம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு கொடுத்த இலவச இடத்தையும், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் ஒரு தனியார் நிறுவனம் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் புகார் மனு கொடுத்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் திரண்டு வந்து நடகோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய ரேஷன்கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு தாசில்தார் தனுஷ்கோடி சம்பவ  இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி அங்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்