சாலை விரிவாக்க பணிக்கு பாறைகள் அகற்றம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிவாக்க பணிக்கு பாறைகள் அகற்றப்பட்டன.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிவாக்க பணிக்கு பாறைகள் அகற்றப்பட்டன.
அந்தரத்தில் தொங்கிய பாறைகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே பாதை குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையை அகலப் படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 14 இடங்களில் விரிவாக்க பணி மற்றும் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக பாறைகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தன.
உடைத்து அகற்றம்
குறிப்பாக காட்டேரி முதல் மரப்பாலம் இடையே பல இடங்களில் பாறைகள் தொங்கிக்கொண்டு இருந்தன. இந்த பாறைகள் எந்த நேரத்திலும் கீழ விழக்கூடிய அபாயம் இருந்தன. எனவே அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் அந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை உடைத்து எடுத்து அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தடுப்புசுவர்
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிய பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த பாறைகள் அனைத்தும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.