‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-01-07 15:48 GMT
திண்டுக்கல்:
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பாலகிருஷ்ணாபுரம் சர்வேயர்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் மழைநீர் வழிந்தோடாமல் தற்போது வரை அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாநிதி, சர்வேயர்நகர்.
பயன்பாட்டுக்கு வராத கட்டிடம்
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் அழகர்நாயக்கன்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு புதிதாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது அந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோக்குமார், தேனி.
தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்
பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை தெருவில் விளையாடும் சிறுவர்களை துரத்திச்சென்று கடிக்கிறது. வாகன ஓட்டிகளையும் விட்டு வைப்பதில்லை. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித்குமார், எரமநாயக்கன்பட்டி.
அரசு பஸ் இயக்கப்படுமா?
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தோட்டனூத்து, அரசனம்பட்டி வழியாக குமாரபாளையத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பஸ் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்லுக்கு வேலைக்கு வருபவர்கள், கர்ப்ப கால சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், அரசனம்பட்டி.
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
தேனி அருகே உள்ள அன்னஞ்சி தொட்டராயர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல், அன்னஞ்சி.


மேலும் செய்திகள்