புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படும்

கொரோனா பரவல் தன்மைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2022-01-07 15:25 GMT
திருக்கனூர், ஜன.8-
கொரோனா பரவல் தன்மைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
முகாமுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என கேட்கின்றனர். மற்ற மாநிலங்களை விட கொரோனா தொற்று பரவல் புதுச்சேரியில் குறைவாக தான் உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா பரவலின் தன்மைக்கேற்ப முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் பா.ஜ.க. பிரமுகர்கள் அருள் முருகன், முத்தழகன், தமிழ்மணி, போட்டோ ஸ்டூடியோ ராஜா, அ.தி.மு.க. பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்