குரும்பூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகைகொள்ளை

குரும்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்

Update: 2022-01-07 14:49 GMT
தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளுவர் மேல தெருவைச் சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவருடைய மனைவி நாகூர் அம்மாள் (வயது 85). கணவர் இறந்து விட்டதால் இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவருக்கு பக்கத்து தெருவில் வசித்து வரும் தனது மகள் வீட்டில் இருந்து தினமும் சாப்பாடு கொடுக்கப்பட்டு   வந்தது.  நேற்று  முன்தினம் இரவில் சாப்பிட்டுவிட்டு நாகூர் அம்மாள் தனது வீட்டில் தூங்கச் சென்றார். 

நள்ளிரவில் அவரது வீட்டின் பின்புறம் வழியாக திடீரென்று மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் நாகூர் அம்மாளை தாக்கி, அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச்   சென்றதாக   கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த நாகூர் அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொடூரக்கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வெகு நேரம் ஆகியும் நாகூர் அம்மாள் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அந்த சமயத்தில் நாகூர் அம்மாளின் பேரன் பழனி என்பவர் சாப்பாடு கொடுப்பதற்காக வந்தார். கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நாகூர் அம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதையும், பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக குரும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ெஜயக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

நாகூர் அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டிைய கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்