கோவை
ஆபாசபடத்தில் நடித்ததாக கூறி மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருமணம்
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் துர்காதேவி (வயது 35). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் கோவை காட்டூர் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது
எனக்கும், சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார் (44) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது அவர் போலீஸ்காரராக பணிபுரிந்தார்.
எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது ஜெயக்குமார் போலீஸ் வேலையில் இல்லை.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது கணவர் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் நான், அவரை விட்டு பிரிந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.
கொலை மிரட்டல்
எனது கணவர் கடந்த 3-ந் தேதி என்னை செல்போனில் அழைத்து, நீ ஆபாச படத்தில் நடித்து உள்ளாய், அந்த வீடியோ என்னிடம் உள்ளது.
அது குறித்து பேச கோவை காந்திபுரத்துக்கு வா என்று கூறினார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் கோவை காந்திபுரத்திற்கு பஸ்சில் வந்தேன். அங்கு எனது கணவரை சந்தித்தேன்.
அவரிடம், நான் நடித்ததாக கூறும் வீடியோவை காண்பிக்குமாறு கேட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் பொது இடத்தில் வைத்து என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் அவரிடம், நான் நடித்ததாக கூறும் எவ்வித வீடியோக்களும் இல்லை. என்னை தாக்கிய ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குப்பதிவு
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து காட்டூர் போலீசார் முன்னாள் போலீஸ்காரர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.