மாநில அளவில் கோவை மாநகர போலீஸ் முதலிடம்
மாநில அளவில் கோவை மாநகர போலீஸ் முதலிடம்
கோவை
காகிதமில்லா இ-ஆபிஸ் பயன்பாட்டில் தமிழக அளவில் கோவை மாநகர போலீஸ் முதலிடம் பிடித்தது.
இ- ஆபிஸ் மென்பொருள்
அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டம் போலீஸ் துறையில் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2 மாதங்களாக இந்த திட்டம் 100 சதவீதம் செயல்பாட்டில் உள்ளது. போலீசாரின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தை யும் கணினி மூலம் அனுப்ப இ-ஆபிஸ் எனும் தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆயிரத்து 316 கடிதங்களும், நவம்பர் மாதம் 9 ஆயிரத்து 975 கடிதங்களும் இ-ஆபிஸ் மூலம் அனுப்பி கோவை மாநகர போலீஸ் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து உள்ளது.
பாராட்டு சான்றிதழ்
இதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கோவை மாநகர போலீசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அது, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாரிடம் நேற்று வழங்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது
நிர்வாக ரீதியிலான கடிதங்கள் தற்போது இ-ஆபிஸ் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. பதவி உயர்வு, பணியிட மாற்றம், விடுமுறை, மருத்துவ விடுமுறை, துப்பாக்கி மற்றும் பட்டாசு கடை வைப்பது உள்ளிட்ட உரிமம் கேட்டு விண்ணப்பித்தல் போன்ற அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.
ரகசிய எண்
அதற்காக போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் ஆகியோருக்கு ரகசிய எண் வழங்கப்பட்டு உள்ளது.
கமிஷனர் தனது கணினியில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்த்து ஒப்புதல் அளித்ததும், அந்த ஆவணம் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று விடும்.
தேவை என்றால் கமிஷனர் தனது கணினியில் அந்த ஆவணம் அல்லது கடிதத்தில் திருத்தம் செய்ய முடியும்.
இதன்மூலம் கோப்புகள் தேக்கமடைவது தவிர்க்கப்படும். காகிதங்களின் பயன்படும் குறைவதோடு, நேரமும் மிச்சமாகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.