சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி; காஞ்சீபுர கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
சமையல் போட்டியில் காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரம் மாநகராட்சி சத்துணவு பணியாளர்கள் பாரம்பரிய உணவு வகைகள், அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லா சமையல், இயற்கை உணவு சிறுதானிய உணவு வகைகள் செய்திருந்தனர். இந்த போட்டியில் தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் திருப்புட்குழி அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் 10 மாணவர்கள் சமைக்கப்பட்ட உணவை சுவை, மணம், சத்து, தோற்றம் போன்றவை பார்த்து ஆய்வு செய்து தேர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஶ்ரீதேவி, ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமாறன், திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சற்குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.