பாதயாத்திரை பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பாதயாத்திரை பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தங்க வைக்கப்பட்டனர்

Update: 2022-01-07 13:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முககவசம் அணியாத 1,041 பேருக்கு போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் இரவில் பாதயாத்திரை பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தங்க வைக்கப்பட்டனர்.
பாதயாத்திரை பக்தர்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இரவில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதித்தனர்.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பாதயாத்திரை பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். யாரும் இரவில் நடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து நிறுத்தி, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
அபராதம்
இந்த நிலையில் அரசு விதித்து உள்ள கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி மாவட்டத்தில் பொது இடங்களில் கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடியவர்கள் 95 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முககவசம் அணியாத, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 194 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 164 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 201 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 107 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 56 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 188 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 49 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 82 பேர் மீதும் ஆக மொத்தம் 1,041 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்