முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

Update: 2022-01-06 22:15 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு ஒமைக்ரான் வைரசும் அச்சுறுத்தி வருவதால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல் ஆகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது  இடங்களில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வௌியே செல்பவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து போலீசாரும் தங்களது எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
வாகன சோதனை
நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்த வரையில் சுகாதார ஆய்வாளர்கள், மாநகர அமைப்பு ஆய்வாளர்கள் ஆகியோர் தனித்தனி குழுக்களாக ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் நேற்று முக கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதே போல போக்குவரத்து ஒழுங்குபிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு போன்ற பகுதிகளில் வாகன சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களுக்கு அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாமல் சாலையில் நடந்து சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்றும், எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே நடமாட வேண்டும் என்றும் போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்