திட்டமிட்டப்படி பாதயாத்திரையை தொடங்குவோம்; கைது செய்து பாருங்கள் - கர்நாடக அரசுக்கு டி.கே.சிவக்குமார் சவால்

திட்டமிட்டப்படி 9-ந்தேதி பாதயாத்திரை தொடங்குவோம், எங்களை கைது செய்து பாருங்கள் என்று கர்நாடக அரசுக்கு டி.கே.சிவக்குமார் சவால் விடுத்துள்ளார்.

Update: 2022-01-06 21:54 GMT
பெங்களூரு:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பதவி ஏற்பு விழா

  மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாங்கள் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால், பாதயாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், ஒருவேளை பாதயாத்திரை நடத்தினால் கைது செய்வதாகவும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யட்டும். நாங்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை மேற்கொள்வோம்.

  கொரோனா தடுப்பு விதிகள் அமலில் இருந்தாலும் விதான சவுதாவில் புதிய எம்.எல்.சி.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்துள்ளனர். அரசு என்ன செய்கிறது. அதில் பங்கேற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அரக ஞானேந்திரா பதிலளிக்க வேண்டும். போலீஸ் மந்திரி எங்களை மிரட்டுகிறாரா?. இதற்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

பாதயாத்திரையை தடுக்க முடியாது

  நான் சிறைக்கு சென்று போராட தயார். இந்த மாநில மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம். நாங்கள் பாதயாத்திரை நடத்துகிறோம். எந்த விழா, கூட்டங்கள் அனுமதி இல்லை என்று கூறிய அரசு, பதவி ஏற்பு விழாவுக்கு எப்படி அனுமதி கொடுத்தது. மேல்-சபை கூட்ட அரங்கத்தில் இந்த விழாவை நடத்தி இருக்க வேண்டும். நான் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன்.

  தைரியம் இருந்தால் எங்களை கைது செய்து பாருங்கள். எங்களை கைது செய்ய அரக ஞானேந்திரா, இன்னொரு ஜென்மம் எடுத்து வர வேண்டும். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஓடும் ஆறு, வீசும் காற்று, உதயமாகும் சூரியனை எப்படி தடுக்க முடியாதோ அதே போல் எங்கள் பாதயாத்திரையை தடுக்க முடியாது. இந்த அரசு தங்கள் கட்சிக்கு ஏற்றவாறு விதிமுறைகளை அமல்படுத்துகிறது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்