அந்தியூர் அருகே லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு
அந்தியூர் அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கண்டக்டர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் நாகிரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். ரவியும், கார்த்திக்கும் நண்பர்கள் ஆவர்.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 8.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அந்தியூரில் இருந்து நாகிரெட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். அவருக்கு பின்னால் ரவி உட்கார்ந்திருந்தார்.
விபத்து
கெம்மியம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளும், மேட்டூரில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் ரவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்திக் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சாவு
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்து ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.