திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து; 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு முட்டைகோஸ் பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை குமார் என்பவர் ஓட்டினார். காலை 7 மணி அளவில் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் குமார் காயமின்றி உயிர் தப்பினார். இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.