அம்மாபேட்டையில் குழந்தை பிறந்த 20 நாளில் பெண் திடீர் சாவு

அம்மாபேட்டையில் குழந்தை பிறந்த 20 நாளில் பெண் திடீரென இறந்தாா்.

Update: 2022-01-06 21:02 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ரோஜா நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவருடைய மகள் மீரா (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரி.  இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் அபினேசன். மீராவுக்கும், அபினேசனுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற்றது. அபினேசன், சொந்தமாக ஈரோட்டில் கார்களுக்கு கேஸ் கிட் பொருத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கர்ப்பிணியாக இருந்த மீராவுக்கு கடந்த 16-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் தணிகாசலத்தின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கினார். உடனே தணிகாசலமும், அவருடைய மனைவி செண்பகவள்ளியும் மீராவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மீராவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இதுபற்றி கோபி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்