32 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை

சேலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 32 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-06 20:35 GMT
சேலம், ஜன.7-
சேலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 32 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கவும், கட்டுப்பாடுகளை மீறி கடைகள், ஓட்டல்கள் திறக்க தடை விதிக்கவும், தடையை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
அதன்பேரில், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டாம்பட்டி, அம்மாபேட்டை உள்பட 32 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடின
இரவு 10 மணி ஆனவுடன் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், கடைவீதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
அதேசமயம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் குறைவான அளவில் பயணிகள் இருந்தனர். சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன தணிக்கை
சேலம் 5 ரோடு பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள்? என்றும், தேவையில்லாமல் தடையை மீறி வெளியில் நடமாடினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே, இரவு நேர ஊரடங்கைகடைபிடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இதேபோல், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், ஏ.வி.ஆர். ரவுண்டானா, குரங்குச்சாவடி உள்பட பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாநகர் முழுவதும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த ஓட்டல்கள், டீக்கடைகளை அடைக்குமாறு போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
புறநகரில்...
இதேபோல், மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், வீரபாண்டி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, தாரமங்கலம், மல்லூர், மகுடஞ்சாவடி உள்பட பல்வேறு இடங்களிலும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. 
தேவையில்லாமல் வெளியில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் உலா வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அதேபோல், மாவட்ட எல்லையான தலைவாசல், சங்ககிரி, கே.ஆர்.தோப்பூர், மல்லூர் ஆகிய பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடும் நடவடிக்கை
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கூறியதாவது:-
சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின்பேரில் 6 உதவி கமிஷனர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 700 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் ஊர்  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், முககவசம் அணியாமல் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சேலம் மாநகரில் 2 நாட்களில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 1,700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்