மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

ஓமலூர் அருகே மயானத்துக்கு செல்ல பாதை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் சாைல அமைத்த பிறகு பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2022-01-06 20:35 GMT
ஓமலூர்:-
ஓமலூர் அருகே மயானத்துக்கு செல்ல பாதை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் சாைல அமைத்த பிறகு பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெண் மரணம்
ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சி கெண்டபிரியான்வளவு போயர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல பாதை அமைத்து தரவேண்டும். மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மனைவி மேனகா (வயது 30) உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் உடலை எடுத்துச்செல்ல பாதை வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் முருகன் தலைமையில் திரண்டனர். மேலும் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
பின்னர் அவர்கள் மயானத்துக்கு செல்ல பாதை வசதி வேண்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை வீட்டில் இருந்து இறந்த பெண்ணின் உடலை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காடையாம்பட்டி துணை தாசில்தார் கோவிந்தராஜ், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட இடம் கூட்டு பட்டாவில் உள்ளது. அதனால் உடனடியாக பாதை வசதி ஏற்படுத்த முடியாது என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் உறவினர்கள் இறந்த ெபண்ணின் உடலை காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து வருவோம் என்று தெரிவித்தனர். 
சாலை அமைப்பு
இதன் பின்னர் வருவாய்த்துறையினர் நில உரிமையாளரிடம் பேசி பாதை அமைக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் 10 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட்டது. பின்னர் இறந்த பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்