வீட்டை உடைத்து திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது
மதுரையில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
மதுரை,
மதுரையில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
திருட்டு
மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார் வையில் உதவி கமிஷனர் சூரக்குமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அங்கு பதிவான கைரேகை களை வைத்து விசாரணை நடத்தினர். அதில் கருப்பாயூரணி சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் ராமச்சந்திரன் (வயது 34), ஆண்டார் கொட்டாரம் பழனிமுருகன் (24) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து போலீசார் கருப்பாயூரணி பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அண்ணாநகர், வளர்நகர் பகுதியில் நடந்த 4 திருட்டு சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.