அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு

மதுரையில் மீண்டும் மிரட்டும் கொரோனா காரணமாக, அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

Update: 2022-01-06 20:21 GMT
மதுரை, 
மதுரையில் மீண்டும் மிரட்டும் கொரோனா காரணமாக, அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
மீண்டும் கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களான மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புடன், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரிப்பதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மற்ற மாவட்டங்களை போன்று மதுரையிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது. குறிப்பாக கடந்த 4 தினங்களில் 4, 19, 32, 52 என பாதிப்பு பதிவாகியது, மருத்துவத் துறையினரை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மாவட்ட நிர்வாகமும், பொது இடங்களில் முககவசம் அணியாத வர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிறப்பு வார்டு
இந்தநிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கைளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறுகையில், கொரோனா பாதிப்பு திடீரென அதி கரிப்பதை தொடர்ந்து தற்காலிகமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி வாளகத்தில் சிறப்பு வார்டு தயாராக உள்ளது. அங்கு படுக்கைகளுடன், ஆக்சிஜன் வசதியும், மருத்துவ கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. இதுபோல், நர்சுகளும், டாக்டர் களுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
ஒரே நாளில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பொறுத்து கூடுதல் படுக்கைகள் அமைக்கவும் மருத்துவமனை நிர்வாகம் தயாராக இருக்கிறது. அதுபோல், கொரோனா இல்லாத வேறு இணை நோயாளிகள் பாதிக்காத வகையில் அவர்களுக்கும் சரிவர சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
பேராயுதம்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கடந்த காலங்களை போல் இல்லாமல் திடீரென அதிக அளவில் மக்களுக்கு பரவுவதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முககவசம் மட்டுமே கொரோனா பரவலை தடுக்கும் போராயுதம் என்றனர்.
டாக்டர்கள்,நர்சுகள் தேர்வு
கொரோனா 3-வது அலை தடுப்பு பணிகளுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு மட்டும் பணிபுரிய (தேவைப்பட்டால் பணி நீட்டிப்பு வழங்கப்படும்) தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக நுட்பனர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். 2-வது அலையின் போது பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்