விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெண்

நாகர்கோவிலில் காதலன் பேச மறுத்ததால், விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-06 20:12 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் காதலன் பேச மறுத்ததால், விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
காதல்
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் கல்லூரியில் படித்த போது, வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும், பேசியும், செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் வாலிபருக்கு போலீஸ் வேலை கிடைத்தது. 
இந்த நிலையில் காதல் ஜோடியின் ரகசிய காதல் விவகாரம் வாலிபரின் வீட்டினருக்கு தெரிய வந்தது. வாலிபரை பெற்றோர் கண்டித்தனர். அதைத்தொடர்ந்து தன் காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் வாலிபர் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது இளம்பெண்ணை பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.
போலீசில் புகார்
பின்னர் இதுதொடர்பாக இளம்பெண் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. வாலிபரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணை சில மாதங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக வாலிபர் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இளம்பெண் சமாதானம் அடைந்தார். 
அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக இளம்பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்து வந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னை, தன் காதலனுடன் சேர்த்து வைக்கும்படி கூறியிருந்தார்.
விஷம் குடித்த இளம்பெண்
அதன்பேரில் வாலிபரையும், இளம்பெண்ணையும் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். அதன்படி இருவரும் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் போலீஸ் நிலையம் முன் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென ஒழுகினசேரியில் இருந்து வடசேரி செல்லும் ரோட்டுக்கு ஓடியதாகவும், அங்குள்ள பெட்டிக்கடை அருகே இளம்பெண் விஷம் குடித்ததாகவும், அதோடு விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கும் வந்துள்ளார். 
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
காதலன் பேச மறுத்ததால் விஷம் குடித்து விட்டு இளம்பெண் போலீஸ் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் செய்திகள்