நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
முத்தரப்பு கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து முத்தரப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாடகை நிர்ணயம்
பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,350 எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1.700 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல் செய்வது குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், தாசில்தார்கள், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை எந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,630 எனவும், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1,010 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் செல்லக்கண்ணு, துணை இயக்குனர் ஈஸ்வர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கோமதி தங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.