குட்டையில் மூழ்கி தாய்- சிறுவன் பலி

ராதாபுரம் அருகே குட்டையில் மூழ்கி தாய், சிறுவன் பலியானார்கள்.

Update: 2022-01-06 19:36 GMT
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே குட்டையில் மூழ்கி தாய்-சிறுவன் பலியானார்கள். 

அண்ணன்-தம்பி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு கார்த்திக் (13), சுபாஷ் (11) ஆகிய 2 மகன்கள் உண்டு.
அங்குள்ள உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கார்த்திக் 8-ம் வகுப்பும், சுபாஷ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
 
தண்ணீரில் தத்தளித்தனர்
இந்த நிலையில் நேற்று ஊருக்கு அருகே உள்ள பழைய கல்குவாரிகுட்டையில் பேச்சியம்மாள் தனது மகன்களுடன் குளிக்க சென்றார். குட்டையில் சிறுவர்கள் 2 பேரும் குளித்துக் கொண்டு இருந்தனர். பேச்சியம்மாள் துணிகளை துவைத்துக் கொண்டு இருந்தார். 
அப்போது, திடீரென்று காா்த்திக், சுபாஷ் ஆகியோர் தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்த பேச்சியம்மாள் அதிர்ச்சி அடைந்து தனது மகன்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

தாய்-மகன் சாவு
முதலில் கார்த்திக்கை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 2-வது மகன் சுபாஷை மீட்பதற்கு சென்றார். ஆனால், அதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சியம்மாள் தண்ணீரில் மூழ்கி தனது மகனை தேடினார். ஆனால் அவரும் குட்டையில் மூழ்கினார். தண்ணீரில் மூழ்கிய பேச்சியம்மாள், சுபாஷ் ஆகியோர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். 
இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த கார்த்திக் வெகு நேரம் ஆகியும் தனது தாய், தம்பி வெளியே வராததால் கதறினான். அவன் உடனடியாக ஊரில் சென்று விவரங்களை தெரிவித்தான். கிராம மக்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, குட்டையில் மூழ்கி இறந்த பேச்சியம்மாள், சுபாஷ் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

சோகம்
இதுகுறித்து உடனடியாக ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பேச்சியம்மாள், சுபாஷ் ஆகியோர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராதாபுரம் அருகே குட்டையில் மூழ்கி தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்