தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம்; 300 வாழைகள் சேதம்
களக்காடு அருகே தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து 300 வாழைகளை சேதப்படுத்தின.
களக்காடு:
களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சுவிளை, அரசபத்து உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். தற்போது வாழைகள் நன்கு வளர்ச்சி அடைந்து குலை தள்ளும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வாழை தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.
வாழையின் அடியில் குழி தோண்டி கிழங்கை தின்னும் காட்டுப்பன்றிகள், வாழையை சரித்து குலையையும் உண்கின்றன. இதனால் கடந்த ஒரு வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகள் சேதமடைந்துள்ளன. எனவே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.