உரிமம் முடிந்த எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக மூடவேண்டும்
உரிமம் முடிந்த எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.;
மயிலாடுதுறை:
உரிமம் முடிந்த எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் திருவேள்விக்குடி கிராம மக்கள், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த எண்ணெய்-எரிவாயு கிணற்று வளாகத்தில் தற்போது கனரக தளவாடங்களை கொண்டு வந்து இறக்கிக்கொண்டிருக்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். இறக்கப்படும் தளவாடங்களும், குழாய்களும் புதிய எண்ணெய்-எரிவாயு கிணறு அமைக்கும் தேவையை நிறைவு செய்வதாக இருக்கின்றன.
ஒரு பழைய எண்ணெய் கிணற்றில் மராமத்து வேலை செய்ய அதிக அளவு 7 நாட்கள் மட்டுமே ஆகும். புதிய கிணறுகள் அமைக்க 1½ மாதங்கள் ஆகும். இப்போது இறக்கப்படும் கனரக தளவாடங்களும், எந்திரங்களும் கூடுதலான புதிய கிணறுகள் அமைக்கும் தேவையை நிறைவு செய்யக்கூடியவை.
அனுமதி இல்லை
ஓ.என்.ஜி.சி.க்கு பழைய எண்ணெய் கிணறு வளாகங்களில் புதிய எண்ணெய்-எரிவாயு எடுப்பு திட்டங்களை அமைக்கும் நோக்கம் இருக்கிறது. காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று 2020-ல் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இங்கே புதிய இடங்களிலோ அல்லது பழைய எண்ணெய்க்கிணறு வளாகங்களிலோ, புதிய எண்ணெய்-எரிவாயு திட்டங்களை அமைக்க, நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்பதை இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பழைய கிணறுகளை புதுப்பிப்பது ஏற்க முடியாதது ஆகும். மராமத்து என்ற பெயரில் ஓசைப்படாமல் பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது.
சம்பந்தப்பட்ட இடத்தில் எண்ணெய்-எரிவாயு கிணற்றில் மராமத்து வேலை செய்யப்போவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கூறினால், அக்கிணற்றிற்கான உரிமம், அது முடியும் காலம், தற்போது உரிமம் உயிருடன் இருப்பதற்கான புதுப்பித்தல் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு அரசு அளித்துள்ள உரிமத்தின் நகல் ஆகியவற்றை தாங்கள் பரிசீலிப்பதோடு, எங்களுடைய பார்வைக்கும் அளிக்க வேண்டுகிறோம்.
உடனே தடை செய்ய வேண்டும்
மேலும் உரிமம் முடிவுற்ற எண்ணெய்க்கிணறுகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கிணறுகளின் ஆவணங்கள் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே திருவேள்விக்குடி கிராமத்தில் எண்ணைக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயற்சிப்பதை உடனே தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்த டாக்டர் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஜீவானந்தம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.