ஒமைக்ரான் அச்சத்தால் பொதுமக்களிடம் தடுப்பூசி ஆர்வம் அதிகரிப்பு

ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் கொரோனா 3-வது அலை வரத்தொடங்கி உள்ளதாலும் அதுகுறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

Update: 2022-01-06 18:30 GMT
ராமநாதபுரம், 

ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் கொரோனா 3-வது அலை வரத்தொடங்கி உள்ளதாலும் அதுகுறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொரோனா 3-வது அலை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி என நடைமுறைகளை பின்பற்றினாலும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் அதனை தீவிரப்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் தொற்றும், கொரோனா 3-வது அலையும் வேகமாக பரவி வருவதால் அரசின் சார்பில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
தடுப்பூசி
இவ்வாறு தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருஉத்தரகோசமங்கை, தொண்டி, உச்சிப்புளி ஆகிய 5 சுகாதார வட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 724 பேர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.இவர்களில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரத்து 770 பேர் முதல் தடுப்பூசியும், 4 லட்சத்து 11 ஆயிரத்து 834 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். 
இதேபோல, நயினார்கோவில், போகலூர், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், பார்த்திபனூர் ஆகிய சுகாதார வட்டங்களை உள்ளடக்கிய பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 738 பேர் முதல்தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 71 ஆயிரத்து 882 பேர் 2-ம் கட்ட தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்,ஆக மொத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை, 9 லட்சத்து 90 ஆயிரத்து 508 பேர் முதல்தவணைதடுப்பூசியும், 7 லட்சத்து 83 ஆயிரத்து 716 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இது முதல்கட்ட தடுப்பூசியில் 91.41 சதவீதமும், 2-ம் தவணைதடுப்பூசியில் 72.32 சதவீதமும் ஆகும். 

ஆர்வம்

தற்போது கொரோனாவிற்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 
இதேபோல, 15 வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 600 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 927 பேருக்கு முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 38.22 சதவீதம் ஆகும்.

மேலும் செய்திகள்