முககவசம் அணியாதவர்களுக்கு கடைகளில் பொருட்கள் விற்க தடை. அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.;
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழு ஊரடங்கு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிகவும் தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டம் நடத்தவும், வழிபாடு நடத்தவும் தடை செய்யப்படுகிறது. அனைத்து வணிக வளாகங்கள், ஷோரூம்கள் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
50 சதவீத வாடிக்கையாளர்கள்
ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்டக்டர், டிரைவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
வாடகை கார்களில் டிரைவர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வாடகை ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள், பெரிய அரங்குகள், அருங்காட்சியகங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்கள் 50 சதவீத இருக்கையுடன் செயல்படலாம். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்குள் கலந்து கொள்ளலாம்.
விற்பனை செய்யக்கூடாது
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு பஸ், ரெயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லை. வேலூர் மாவட்ட எல்லைகளில் இதுதொடர்பாக போலீசார் மூலம் கண்காணிக்கப்படும். முககவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு எந்தவித பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது.
பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோய் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.