பனப்பாக்கம் அருகே உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாக கூறி உதவித்தொகை நிறுத்தம்

பனப்பாக்கம் அருகே உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அளித்த மனுவையும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

Update: 2022-01-06 18:29 GMT
நெமிலி

பனப்பாக்கம் அருகே உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அளித்த மனுவையும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகப்ப ரெட்டி. இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 72). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டும் நிலையில் தனக்கு மட்டும் உதவித் தொகை வழங்காததால், தபால் அலுவலகம், வங்கி, கிராமநிர்வாக  அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனக்கு உதவித்தொகை ஏன் வரவில்லை என கேட்டு அலைந்து வருகிறார்.

இறந்துவிட்டதாக அறிக்கை

நெமிலி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில்  விசாரித்தபோது அவர் இறந்துவிட்டார் என அறிக்கை பெறப்பட்டு, மூதியோர் உதவித்தொகை திட்டத்தின் பெயர் பட்டியலில் இருந்து முனியம்மாள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராமநிர்வாக அலுவலரை பாருங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து முனியம்மாள் இதுதொடர்பாக புதுப்பட்டு கிராமநிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று கேட்ட போது, உங்கள் ஆதார் கார்டு தவறாக இருந்து அதனால் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கலாம், புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள் என கூறி உள்ளார். வேறு வழியின்றி முனியம்மாள் மீண்டும் புதிதாக முதியோர் உதவித்தொகை வேண்டி மனு செய்தார்.

புதிய மனுவும் நிராகரிப்பு

புதிய மனுவின் மீது கிராமநிர்வாக அலுவலர் ஒப்புதல் அளித்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பிய நிலையில், வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா சுமார் ஒரு மாதம் விடுமுறையில் சென்றதால் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. விடுமுறைக்கு பின் ஒப்புதல் வழங்கி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு அனுப்பிவைத்த மனு உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் என தவறான அறிக்கை கொடுத்து உதவித்தொகை நிறுத்தப்பட்டு, மீண்டும் மனு செய்ய சொல்லி அந்த மனுவையும் நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன? வேறு ஏதேனும் உள்நோக்கத்தோடு நிராகரிக்கப்பட்டுள்ளதா? மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் செய்த தவறால் கடந்த நவம்பர் மாதம் முதல் 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு மிகவும் சிரமத்திற்கு இடையில் உயிரோடுதான் இருந்து வருகிறேன், இறந்து விடவில்லை. எனவே உதவித்தொகை கொடுக்க சொல்லுங்கள் என முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்