பா.ஜ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம். போலீசாருடன் தள்ளுமுள்ளு
பா.ஜ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில்பிரிவு தலைவர் பிரேம்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தொடங்கி வைத்து பேசினார் .
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், பஞ்சாப் முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர், கண்ணன், தண்டாயுதபாணி, ஒன்றிய கவுன்சிலர் கேஜி. பூபதிதிருநாவுக்கரசு, நந்தகுமார், சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் நகர பொதுச்செயலாளர் டிவி.பார்த்திபன் நன்றி கூறினார்.
தாலுகா அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார், ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று கூறினர். ஆனால் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பினனர் சிறிது தூரம் ஊர்வலமாக சென்று கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.