திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 4 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தயார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 4 ஆயிரம் படுக்கைகளுடன் தயார்நிலையில் இருப்பதாகவும், இரவு நேரங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 4 ஆயிரம் படுக்கைகளுடன் தயார்நிலையில் இருப்பதாகவும், இரவு நேரங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று மாலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 பேருக்கு ஒமைக்ரான்
கொரோனா, டெல்டா, ஒமைக்ரான் நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 58 பேருக்கு கொரோனா தொற்று இருந்து வருகிறது. 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நோய்த்தொற்று, காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக 04179-229008, 222111 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். தங்களின் சந்தேகங்களையும் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் தீர்த்து வைப்பார்கள்.
4 ஆயிரம் படுக்கைகள்
அதேபோல் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை நாள்தோறும் செய்யப்பட்டு தொற்று கண்டறிந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
மாவட்டத்தில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதிகள், படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 49 சதவீதம் செலுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக இருக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
வாகனங்கள் பறிமுதல்
தொற்று பரவலை தடுக்க இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். மாவட்ட எல்லைகளில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்கானிக்கப்படுகிறது. 16 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருவார்கள். அதேபோல் 30 இருசக்கர வாகனங்களில் இரவு முழுவதும் ரோந்து பணி நடைபெறும். இதில் உத்தரவை மீறி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஏலகிரி மலை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் 50 சதவீத அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள். இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது. கேளிக்கை கொண்டாட்டம் உள்ளிட்டவைகள் நடத்தக்கூடாது. கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் ஏலகிரி மலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு சீல்
ஆந்திர, தமிழக எல்லையில் சோதனைச்சாவடிகளில் எந்த வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது. அரசு அறிவித்த அனைத்து உத்தரவையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனை வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், திட்ட இயக்குனர் செல்வராசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.