வேலூர் மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 300 போலீசார்
வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 300 போலீசார் ஈடுபட உள்ளனர் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 300 போலீசார் ஈடுபட உள்ளனர் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
இரவுநேர ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீஸ் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அனைவரும் முககவசம் அணிந்துள்ளனரா?, அத்தியாவசிய தேவைக்காக பயணம் செய்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
300 போலீசார்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு பணியை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 300 போலீசார் ஈடுபட உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கின்போது 600 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் 57 இடங்களிலும், மாநில, மாவட்ட எல்லைகளான 6 இடங்களிலும் வாகன தணிக்கை செய்யப்படும். இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது இன்று முதல் (வெள்ளிக்கிழமை) நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவலை தடுக்க அனைவருக்கும் தெர்மல், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.