பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைப்பு 480 காசுகளாக நிர்ணயம்
பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
25 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-490, ஐதராபாத்-440, விஜயவாடா-480, மைசூரு-500, மும்பை-515, பெங்களூரு-500, கொல்கத்தா-540, டெல்லி-505.
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பொங்கல் பண்டிகை
முட்டை விலை வீழ்ச்சி குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முடிவடைந்த பிறகு முட்டை விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மேலும் வீழ்ச்சி அடையும் என்பதால் விற்பனையை அதிகரிக்க முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டு இருப்பது, எந்த வகையிலும் முட்டை, கோழி விற்பனையை பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.