குமாரபாளையத்தில் சாயக்கழிவு கலந்து நிறம் மாறிய காவிரி குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் சாயக்கழிவு கலந்து காவிரி குடிநீர் நிறம் மாறி வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-06 18:26 GMT
குமாரபாளையம், ஜன.7-
குமாரபாளையத்தில் சாயக்கழிவு கலந்து காவிரி குடிநீர் நிறம் மாறி வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி குடிநீர்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை குமாரபாளையம் பெரியார் நகர், அம்மன் நகர், நாராயண நகர், அய்யன் தோட்டம், அப்பன் பங்களா, கிழக்கு காலனி, மேற்கு காலனி, தெற்கு காலனி உள்ளிட்ட பகுதியில் குடிநீர் குழாயை திறந்தவுடன் நீல நிறத்தில் குடிநீர் வந்தது. இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு குடிநீர் மாசடைந்து நிறம் மாறி வருகிறது. எனவே அதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் உடனடியாக நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் குடிநீரில் சாயக்கழிவுகள் எங்காவது கலக்கிறதா என்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். 
கடும் நடவடிக்கை
அப்போது திருவள்ளுவர் நகரில் உள்ள தனலட்சுமி மண்டபம் வீதியில் சாக்கடை கழிவுநீர் குடிநீர் குழாயில் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது. இதுகுறித்து குமாரபாளையம் பொதுமக்கள் கூறுகையில், குமாரபாளையத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் சாக்கடை வழியே சாயக்கழிவுநீரை திறந்து விடுகின்றனர். 
இதனால் அது குடிநீருடன் கலப்பது தொடர் கதையாகி வருகிறது. இதுதவிர இந்த சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலப்பதால் காவிரி நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல வகையான நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் சாக்கடை வழியாக திறந்து விடுகிற சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்