மகனை பார்த்து விட்டு திரும்பியபோது பரிதாபம்: மொபட் மீது கார் மோதி கணவன், மனைவி பலி டிரைவர் கைது
பரமத்தி அருகே மகனை பார்த்து விட்டு திரும்பியபோது மொபட் மீது கார் மோதி கணவன், மனைவி பலியாகினர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே மகனை பார்த்து விட்டு திரும்பியபோது மொபட் மீது கார் மோதி கணவன், மனைவி பலியாகினர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோழிப்பண்ணை தொழிலாளர்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கரையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). இவருடைய மனைவி அமுல்ராணி (43). இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுடைய மகன் மணிகண்டன் பரமத்திவேலூர் அருகே பெரியகரசப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் மகன் மணிகண்டனை பார்ப்பதற்காக மொபட்டில் பெரியகரசப்பாளையத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு மகனை பார்த்து விட்டு அக்கலாம்பட்டிக்கு மொபட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி- நாமக்கல் சாலையில் காரைக்கால் பகுதியில் சென்றபோது பெங்களூருவில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்த கார் ஒன்று தறிகெட்டு ஓடி சாலை நடுவே இருந்த தடுப்பை தாண்டி எதிர் திசையில் தங்கவேல் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது.
டிரைவர் கைது
இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அமுல்ராணி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தங்கவேலும் சிறிது நேரத்தில் இறந்தார்.
இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த லிங்கநாயக் மகன் மகேஷ் (26) என்பவரை கைது செய்தனர். மொபட் மீது கார் மோதி கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.