திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு தண்ணீர் எடுக்க சென்றபோது பரிதாபம்;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அய்யப்பன்(வயது 30). இவர் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த 3 பேருடன் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். காலை 10 மணியளவில் சாப்பிடும்போது குடிநீர் தேவைப்பட்டதால் வயலில் உள்ள கிணற்றில் அய்யப்பன் தண்ணீர் எடுத்து வருவதாக உடன் வேலை செய்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நெடுநேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அய்யப்பன் காலில் அணிந்திருந்த செருப்பு, தண்ணீர் பிடிப்பதற்காக எடுத்து வந்த குடமும் கிணற்று நீரில் மிதந்து கொண்டிருந்தது.
இதனால் அய்யப்பன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேரும் கிணற்றில் இறங்கி தேடியபோது அய்யப்பன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.