துணிப்பை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் திடீர் நிறுத்தம்

திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் துணிப்பை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2022-01-06 17:22 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் துணிப்பை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாநகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. பரிசு தொகுப்பு வழங்குவதற்கான துணிப்பை இல்லாததே பொருட்கள் வழங்காததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
துணிப்பை இல்லாததால்...
மேலும் தமிழக அரசு அறிவித்த 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் இந்த துணிப்பையும் அடங்கும் என்றும், எனவே அது இல்லாமல் ஒருவருக்கு கூட பொருட்களை வழங்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை (இன்று) துணிப்பை வந்த உடன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். 
இந்த நிலையில் திருப்பூர் அவினாசி ரோடு ராக்கியாபாளையம் கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட அம்மாபாளையம் குமரன் காலனி ரேஷன் கடை உள்பட பல்வேறு கடைகளில் துணிப்பை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இல்லை என்ற அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனிடையே பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்கள் பலர் இந்த அறிவிப்பை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்