வகுப்பறையில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி
பட்டிவீரன்பட்டியில், வகுப்பறையில் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்தார்.
பட்டிவீரன்பட்டி:
விளாம்பட்டி அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அந்த மாணவி பள்ளிக்கு வந்தார். வகுப்பறையில், சக மாணவிகளுடன் அமர்ந்து பாடத்தை கவனித்து கொண்டிருந்தார்.
திடீரென அவர், தனது புத்தக பையில் இருந்த பேன் மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள், மாணவியை சிகிச்சைக்காக பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் மாணவி, பேன் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. வகுப்பறையில் மாணவி ஒருவர் விஷம் குடித்த சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.