கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி
முன்னேற்பாடு பணி
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஆஸ்பத்திரியில் போதுமான மருத்துவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் குறித்தும், அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிகிச்சைகள் குறித்தும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
பின்னர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 100 சாதாரண படுக்கை வசதிகள், சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கட்டிடத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 100 சாதாரண படுக்கை வசதிகள் என மொத்தம் 400 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 200 சாதாரண படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும்போது தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் நேரு, கொரோனா சிகிச்சை வார்டு பொறுப்பு மருத்துவர் பழமலை, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.