தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-01-06 15:05 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு வாட்ஸ்-அப் எண் 99628 18888 என்ற எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

ஆபத்தான மரக்கிளை

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் பாறை முனீஷ்வரர் கோவில் அருகே ஆபத்தான நிலையில் மரக்கிளை ஒன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது. மேலும் மின் கம்பிகளுக்கு அருகில் தொங்குவதால் எந்த நேரத்திலும் அது கீழே விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் இந்தப்பகுதியில் அதிகமான வாகனப்போக்குவரத்தும் உள்ளது. எனவே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த ஆபத்தான மரக்கிளையை அகற்ற வேண்டும்.
நாகநாதன், காந்தி நகர்.

லாரிகளால் அபாயம்

  கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிகளவில் லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த லாரிகள் மிதமான வேகத்தில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  சித்திக், பாலத்துறை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்ச வஞ்சியாபுரம் பிரிவு ராஜகணபதி நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த ஊரின் மத்திய பகுதியில் குழி தோண்டி அதில்தான் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அவை அகற்றப்படாததால் மலைபோன்று குவிந்து இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
  குணசேகரன், ராஜகணபதிநகர்.

மூடப்படாத குழி

  கோவை கணபதி அருகே சின்னவேடம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிந்த பின்னரும், தோண்டப்பட்ட குழிகளை இன்னும் மூடவில்லை. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தீபன், சின்னவேடம்பட்டி.

நீர்நிலையில் கொட்டப்படும் கழிவுகள்

  கோவை அருகே உள்ள இடிகரை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தடுப்பணை, மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர்நிலைகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அந்த வழியாக செல்லும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
  சந்தோஷ், இடிகரை.

போக்குவரத்துக்கு இடையூறு

  கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள மைலேரிபாளையம் பிரிவில் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
  சரவணன், கிணத்துக்கடவு.

சாக்கடை கழிவுநீர்

  பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் வீடுகளில் உள்ள கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாததால், மண், மரக்கட்டைகள் தேங்கி இருக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
  சந்திரன்,பொள்ளாச்சி.

தெருவிளக்குகள் வேண்டும்

  பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி வைகை நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் இந்தப்பகுதியில் இதுவரை தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் இரவில் வெளியே சென்று திரும்புபவர்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இங்கு தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
  ராஜேந்திரன், மாக்கினாம்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ரெயில்வே பீடர் சாலை வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  ஜெகதீஷ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

சாலை ஆக்கிரமிப்பு

  கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இறங்கும் இடத்தில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்து உள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்றி, சாலையை ஆக்கிரமிப்பு செய்யாமல் கடைகள் வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  சின்னதம்பி, சிங்காநல்லூர்.

பயன்படுத்த முடியாத கழிவறை

  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கர் வீதியில் கழிவறை உள்ளது. இந்த கழிவறை கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருவதுடன், திறந்தவெளியை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்.
  கண்ணப்பன், சூளேஸ்வரன்பட்டி.

மேலும் செய்திகள்