சேறும் சகதியுமான தொழிற்பயிற்சி சாலை

சேறும் சகதியுமான தொழிற்பயிற்சி சாலை

Update: 2022-01-06 14:40 GMT
குன்னூர்

குன்னூரில் சேறும் சகதியுமான தொழிற்பயிற்சி சாலை மாறியதால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

தொழிற்பயிற்சி சாலை

குன்னூரில் உள்ள சுற்றுலா மையமான சிம்ஸ் பூங்கா பின்புறம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மட்டுமின்றி ஹைபீல்ட் பகுதி பொதுமக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தற்போது இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. 

மாணவர்கள் அவதி

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட இந்த சாலையை சரிசெய்ய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நகராட்சி அதகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.

உடனடி நடவடிக்கை

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்கூறும்போது, இந்த சாலையில் உள்ள அபாயகரமான மரங்கள் வெட்டப்பட்டது. ஆனால் அந்த மரங்களை அகற்றாமல் சாலை ஓரத்தில் போட்டு உள்ளனர். 

இதனால் மழை நேரத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் தண்ணீர் தேங்கியதால், சேறும் சகதியுமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்